இன்றைய காலக்கட்டத்தில் தொழில் அதிபர் முதல் தொழிலாளர்கள் வரை வங்கிக்கடன் பெறுவதற்கு கிரெடிட் (அ) சிபில் ஸ்கோர் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. கடன் பெறுவோர் உரிய நேரத்தில் கடனை திருப்பிச் செலுத்த தவறியது, நீண்டகாலமாக கடன் கொண்டிருப்பது, வட்டிக்கான நேரம் தவறுதல் உள்ளிட்டவைகளை குறித்து வைத்து அதற்கேற்றார் போன்று பயனாளிக்கு சிபில் ஸ்கோர் வழங்கப்படுகிறது.

இந்த சிபில் ஸ்கோரை அடிப்படையாக வைத்து வங்கிகள் பயனாளிகளுக்கு கடன் வழங்குகிறது. சிபில் ஸ்கோரானது குறைவான அளவில் இருக்கும் பட்சத்தில் கடன் வாங்குவதில் பல சிரமங்கள் ஏற்படும். அதிகமான சிபில் ஸ்கோரை வைத்திருக்கும் நிலையில், பல கடன் திட்டங்களில் மானியங்கள் பெறுவதை எளிதாக்குகிறது. சிபில் ஸ்கோர் நல்ல நிலையில் இருக்கவேண்டும் எனில், அனைத்து கடன்களையும் உரிய நேரத்தில் செலுத்தப்படுவதையும், நீண்டகாலத்திற்கு கடன்கள் ஏதும் நிலுவையில் இல்லாததையும் உறுதிப்படுத்தவேண்டும்.