உலகில் பாஸ்போர்ட் நடைமுறை தொடங்கப்பட்டு 102 வருடங்கள் ஆகிறது. தற்போது ஒருவர் ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு செல்ல வேண்டும் என்றால் கண்டிப்பாக பாஸ்போர்ட் அவசியம். இது ஒரு நாட்டின் பிரதமர், குடியரசு தலைவர் என பொதுவாக அனைவருக்கும் பொருந்தும். ஆனால் 3 பேர் மட்டும் உலகம் முழுவதும் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்கிறார்கள் என்று சொன்னால் உங்களால் நம்ப முடியுமா.? அது உண்மைதான். அதாவது உலகில் முக்கியமான 3 பிரமுகர்களுக்கு மட்டும் பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யும் சிறப்பு சலுகை உள்ளது.

இவர்கள் வெளிநாடுகளுக்கு சென்றால் அவர்களிடம் யாரும் பாஸ்போர்ட் பற்றி கேட்க மாட்டார்கள். அதற்கு பதிலாக அவர்களுக்கு கூடுதல் மரியாதை மற்றும் விருந்தோம்பல் வழங்கப்படும். அதன்படி இந்த சிறப்பு சலுகையானது பிரிட்டன் மன்னர் மற்றும் ஜப்பான் நாட்டின் மன்னர் மற்றும் ராணி ஆகிய 3 பேருக்கும் வழங்கப்படுகிறது. அதன்படி முன்னதாக மறைந்த பிரிட்டன் ராணி எலிசபெத் அவர்களுக்கு பாஸ்போர்ட் இல்லாமல் பயணம் செய்யும் சலுகை இருந்தது.

இவருடைய மறைவுக்குப் பிறகு பிரிட்டன் மன்னராக பொறுப்பேற்ற சார்லஸுக்கு அந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. இந்த சலுகை பிரிட்டன் மன்னர் சார்லஸுக்கு வழங்கப்பட்ட நிலையில் அவருடைய மனைவிக்கு வழங்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் இதேபோன்று ஜப்பான் நாட்டின் பேரரசர் நருஹிட்டோ மற்றும் அவருடைய மனைவி பேரரசி மசாகா ஓவாடா ஆகியோருக்கு இந்த சலுகை வழங்கப்பட்டுள்ளது. மேலும் இவர்கள் 3 பேரும் வெளிநாடு செல்லும் பட்சத்தில் ஜப்பானின் வெளியுறவு அமைச்சகம் மற்றும் பிரிட்டனில் உள்ள கிங்ஸ் செயலகம் முன்கூட்டியே சம்பந்தப்பட்ட நாட்டிற்கு அது தொடர்பான தகவல்களை அனுப்பிவிடுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.