ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான இன்றைய டி20 உலகக் கோப்பை போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது.

முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் எடுத்தது. சிறப்பாக ஆடிய குர்பாஸ் 56 பந்துகளில் 80 ரன்கள் எடுத்தார். சத்ரன் 44 ரன்கள் சேர்த்தார். ஆப்கானிஸ்தான் அணியில் ரஹ்மானுல்லா குர்பாஸின் சிறப்பான ஆட்டத்தால் ஆப்கானிஸ்தான் நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர்களில் 159/6 ரன்களை சேர்க்க முடிந்தது.

ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹிம் சத்ரான் இருவரும் கவனமாகவும், எச்சரிக்கையுடன் தொடக்க விக்கெட்டுக்கு 103 ரன்கள் குவித்தனர். இந்நிலையில் இன்னிங்ஸின் முதல் பாதியில் நியூசி அணி இரண்டு எளிதான கேட்சுகளை கைவிட்டதாலும், பல ரன்-அவுட் வாய்ப்புகளை தவறவிட்டதாலும், குர்பாஸ் தனது அரைசதத்தை எட்டினார். மேலும் நியூசிலாந்து அணியின் சொதப்பலான பீல்டிங் ரசிகர்களை அதிர்ச்சியாக்கியது.

ஆப்கானிஸ்தான் டெத் ஓவர்களில் தனது விக்கெட்டுகளை இழந்து 20 ஓவர்களில் 159/6 என்று இலக்கை நிர்ணயித்தது. நியூசிலாந்து சார்பில் ட்ரென்ட் போல்ட் மற்றும் மாட் ஹென்றி ஜோடி தலா 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர், லாக்கி பெர்குசன் 1 விக்கெட்டை எடுத்தார்.

ஆனது ஆகட்டும் இந்த ரன்களை ஈசியாக அடித்துவிடலாம் என்ற நம்பிக்கையோடு களமிறங்கிய நியூசி அணிக்கு பரூக்கீ (farooqi ) பெரிய அதிர்ச்சியை கொடுத்தார். அவர் வீசிய முதல் பந்திலேயே தொடக்க ஆட்டக்காரரான ஆலன்(Allen) 0(1) போல்ட் ஆனார். இதை தொடர்ந்து பரூக்கீயின் 2.4 வது ஓவரில் 8(10) ரன்களுக்கு கான்வே(Conway) கேட்ச் கொடுத்து ஆட்டம் இழந்தார். மேலும் வில்லியம்சன் தன்னுடைய நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்துவார் என்று எதிர்பார்த்த ரசிகர்களுக்கு, அதிர்ச்சியூட்டும் விதமாக ரஷித் கான் சூழலில் சிக்கி வில்லியம்சன் 9(13) ரன்களுக்கு ஆட்டம் இழந்தார்.

இவ்வாறு சீட்டுக்கட்டுபோல தொடர்ந்து விக்கெட்டுகள் சரிந்த வண்ணமே இருந்தது. இறுதியில் 15.2 ஓவர் முடிவில் 75 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து தோல்வியை தழுவியது நியூசிலாந்து அணி. இதன் மூலம் ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் சிறப்பான வெற்றி பெற்றது. 2024- இந்த ஆண்டு உலகக்கோப்பையில் பலரும் எதிர்பார்க்காத விதமாக சிறிய அணிகள் பலம் வாய்ந்த அணிகளுக்கு எதிராக தங்களது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திவருவது குறிப்பிடத்தக்கது.