
திருவண்ணாமலை மாவட்டம் தண்டாரம் பட்டு அருகே தண்டபாணி (63) என்பவர் வசித்து வருகிறார். இவருடைய பெற்றோர் ஏழுமலை (90)-முத்தம்மாள். இவர்கள் அதே கிராமத்தில் தனியாக வசித்து வருகிறார்கள். இதில் தண்டபாணியின் மைத்துனர் பரமசிவம் என்பவருக்கும் ஏழுமலைக்கும் இடையே கடந்த 15 வருடங்களாக நில தகராறு இருந்துள்ளது. இதில் தண்டபாணியின் 2-வது மகன் திருவேங்கடம் பரமசிவத்திற்கு ஆதரவாக இருந்தார். இந்த நிலதகறாறு தொடர்பாக நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வரும் நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கோர்ட்டில் நில தகராறு தொடர்பாக விசாரணை நடைபெற்ற நிலையில் இரு தரப்பினரும் கலந்து கொண்டனர்.
பின்னர் அவர்கள் பேருந்தில் வீட்டிற்கு கிளம்பியுள்ளனர். இதில் ஏழுமலை வீட்டிற்கு பேருந்தில் ஏறி சென்ற நிலையில் மோட்டார் சைக்கிளில் வந்த திருவேங்கடம் தன்னுடைய தாத்தாவை வலுக்கட்டாயமாக பேருந்தில் இருந்து கீழே இறக்கினார். பின்னர் அவரை மோட்டார் சைக்கிளில் அமர வைத்து ஆழியாறு சுடுகாட்டுக்கு அழைத்து சென்றார். அங்கு வைத்து அவரை சரமாரியாக அடித்துள்ளார். பின்னர் ஏழுமலையை வீட்டில் தூக்கிக்கொண்டு போட்டுவிட்டு அவர் தப்பி ஓடிவிட்டார். இதில் பலத்த காயமடைந்த ஏழுமலை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இறந்தார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து திருவேங்கடத்தை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.