
தமிழகத்தில் நேற்று ஒரே கட்டமாக நாடாளுமன்ற தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்குப்பதிவில் சென்னை கடைசி இடத்தை பிடித்தது. இந்நிலையில் சென்னையில் உள்ள 3 தொகுதிகளிலும் பதிவான வாக்குப்பதிவு இயந்திரம் சென்னை லயோலா கல்லூரியில் வைக்கப்பட்டது. இந்த பணிகளை நேரில் சென்று மாநகராட்சி ஆணையரும் தேர்தல் நடத்தும் அலுவலருமான ராதாகிருஷ்ணன் பார்வையிட்டார். அதன் பிறகு அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
அவர் பேசியதாவது, மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள லயோலா கல்லூரியின் ஸ்ட்ராங் ரூமிற்கு செல்வதற்கு யாருக்கும் அனுமதி கிடையாது. இந்த அறையில் 156 கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கூறினார். இதைத்தொடர்ந்து சென்னையில் வாக்குப்பதிவு மந்தம் தொடர்பாக செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் புறநகர் பகுதிகளில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தினார்கள். ஆனால் நகர்புறங்களில் உள்ள பொதுமக்கள் ஆர்வத்துடன் வந்து வாக்கு செலுத்தவில்லை. மேலும் இதுதான் வாக்குப்பதிவு மந்தத்திற்கு காரணம் என்று கூறினார்.