நீலகிரி மாவட்டம் ஊட்டியில் வசித்து வரும் ஒரு கூலி தொழிலாளி தம்பதிக்கு 8-ம் வகுப்பு படிக்கும் 13 வயது மகள் இருக்கிறார். இந்த சிறுமியின் நடவடிக்கையில் கடந்த சில நாட்களாக மாற்றம் ஏற்பட்ட நிலையில் யாருடனும் பேசாமல் இருந்ததோடு உடல் நலமும் பாதிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த பள்ளியில் பாலியல் தொல்லை தொடர்பான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. அப்போது நல்ல தொடுதல் மற்றும் கெட்ட தொடுதல் போன்றவைகள் குறித்து மாணவிகளுக்கு விழிப்புணர்வு வழங்கப்பட்டது. இந்நிலையில் அந்த 13 வயது சிறுமி ஆசிரியரிடம்  தன்னை உறவினர் ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்துள்ளதாக கூறியுள்ளார். இதைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த ஆசிரியர் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்தார்.

அந்த தகவலின் படி காவல்துறையினர் பாதிக்கப்பட்ட சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது ஈரோடு மாவட்டத்தைச் சேர்ந்த 36 வயது உறவினர் ஒருவர் கடந்த இரண்டு வருடங்களாக சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்தது தெரிய வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பாக அந்த சிறுமி தன்னுடைய பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளார். அங்கு வந்தும் அந்த உறவினர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதோடு செல்போனில் ஆபாச வீடியோக்களை காண்பித்து அதுபடி நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் சிறுமியிடம் கூறியுள்ளார். இதைத் தொடர்ந்து அந்த 36 வயது நபரை போலீசார் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.