உத்தரபிரதேச மாநிலத்தின் ஹமீர்பூர் மாவட்டத்தில் பரிதாபகரமான சம்பவம் ஒன்று நடந்துள்ளது. மொபைல் போனுக்காக, 13 வயது சிறுவன் ஒருவன் அவனது சொந்த நண்பரால் கொடூரமாகக் கொல்லப்பட்டிருக்கிறார். இந்த சம்பவம் மாவட்டத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

ஏப்ரல் 7ஆம் தேதி ஹமீர்பூரின் ஜாரியா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கச்சுவா காலா கிராமத்தில் இந்த கொலை சம்பவம் பதிவானது. வீட்டிலிருந்து நண்பர்களுடன் வெளியே சென்ற அந்த சிறுவன், பின்னர் காணாமல் போனார். தேடல் நடவடிக்கையின் போது, அவரது சடலம் கிராமத்தில் உள்ள ஒரு கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில், கழுத்தை நெரித்து  சிறுவன்கொலை செய்யப்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது.

விசாரணை மேற்கொண்ட போலீசார், சந்தேகத்தின் அடிப்படையில் இறந்த சிறுவனுடன் கடைசியாக சென்ற நண்பரை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் குற்றம் சாட்டப்பட்ட சிறுவன் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். விலையுயர்ந்த சாம்சங் மொபைல் போனைப் பெறவே, தனது நண்பரை சட்டையால் கழுத்தை நெரித்து கொன்றதாகவும், பின்னர் சடலத்தை கிணற்றில் வீசியதாகவும் வாக்குமூலம் வழங்கினார்.

இறந்த சிறுவனின் மொபைல் போன் காணாமல் போயிருந்தது என்பதையும், பின்னர் சிம்மகார்டை உடைத்து மறைத்துவைத்திருந்ததும் விசாரணையில் தெரியவந்தது. இந்த சம்பவம் குழந்தைகளிடையே பெருகி வரும் மொபைல் போன் ஆசை எவ்வளவு மோசமான நிலைக்கு கொண்டு செல்கிறது என்பதை மீண்டும் ஒருமுறை வெளிக்காட்டியுள்ளது. தற்போது குற்றவாளியை சிறார் காவலில் எடுத்து  விசாரணை மேற்கொள்ளப்படுகிறது. மேலும், இந்த கொடூரமான சம்பவம் மாவட்டத்தில் பெரும் வருத்தத்தையும் ஆவேசத்தையும் கிளப்பியுள்ளது.