
சென்னை பூந்தமல்லி பகுதியில் ராஜேந்திரன் (63) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 3 மகள்களும், வெங்கடேசன் (28) என்ற மகனும் இருக்கிறார்கள். இதில் வெங்கடேசன் சொந்தமாக வேன் ஓட்டி வருகிறார். இந்நிலையில் ராஜேந்திரனுக்கு சொந்தமான 4 சென்ட் இடம் ஒன்று அவர் வீட்டின் அருகில் இருக்கும் நிலையில் அந்த இடத்தை தன்னுடைய பெயருக்கு மாற்ற வேண்டும் என மகன் கேட்டு வந்துள்ளார். ஆனால் தன்னுடைய இடத்தில் மகள்களுக்கும் பங்கு உண்டு என அவர் கூறியுள்ளார்.
இதனால் தந்தை மகனுக்கு இடையே பிரச்சனை ஏற்பட்டது. இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு ராஜேந்திரன் தன் வீட்டின் அருகே உள்ள ஒரு நிலத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது வெங்கடேசன் தன் தந்தையிடம் சென்று நிலம் தொடர்பாக தகராறு செய்தார். ஆனால் நிலத்தை எழுதி வைக்க ராஜேந்திரன் மறுத்துவிட்டார். அப்போது கோபத்தில் தான் ஓட்டும் வேனை தந்தை மீது ஏற்றினார். இதில் ராஜேந்திரன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உடனடியாக வெங்கடேசன் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து தலைமறைவான வெங்கடேசனை வலைவீசி தேடி வருகிறார்கள்.