திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள தாளகிரி ஐயர் தெருவில் ராமச்சந்திரன் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ரமேஷ் என்ற மகன் உள்ளார். இவர் அரசு பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர் ஆவார். இந்நிலையில் ரமேஷ் தனக்கு பாகம் பிரிக்கப்பட்ட சொத்தை தந்தை பெயரில் இருந்து தனது பெயருக்கு மாற்றம் செய்ய திருவண்ணாமலை நகராட்சி அலுவலகத்தில் கடந்த ஜனவரி மாதம் முறையாக விண்ணப்பித்துள்ளார். இதுவரை அந்த மனு மீது நடவடிக்கை எடுக்கவில்லை.

இதுகுறித்து ரமேஷ் கேட்டபோது நகராட்சி வருவாய் உதவி ஆய்வாளரான ராகுல் என்பவர் ரமேஷிடம் சொத்து வரி மாற்றம் செய்ய 30 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இது குறித்து ரமேஷ் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ரமேஷ் கொடுத்துள்ளார். அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் ராகுலை கையும் களமாக பிடித்தனர். அவர் வருவாய் ஆய்வாளர் செல்வராணி தான் பணத்தை வாங்க சொன்னதாக கூறினார். இதனால் செல்வராணியையும் போலீசார் அதிரடியாக கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.