
சென்னை மாவட்டம் அண்ணாசாலையில் கர்ப்பிணி பெண்ணை இடிக்கும் அளவிற்கு பைக் டாக்ஸியை தாறுமாறாக ஓட்டிய ரேபிடோ டிரைவரிடம் வாடிக்கையாளர் மீது தாக்குதல் நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நுங்கம்பாக்கத்தை சேர்ந்த ராஜசேகர் (28) ரேபிடோ ஆப்பில் மூலம் திருவல்லிக்கேணியில் இருந்து நுங்கம்பாக்கம் செல்ல பைக் டாக்சி புக் செய்தார். இதற்கு கிதியோன் (36) என்பவர் பைக் கொண்டு வந்தார்.
பயணத்தின் போது, ரேபிடோ டிரைவர் கிதியோன் வாகனத்தை அதிவேகமாகவும், கட்டுப்பாடின்றி இயக்கியதாகவும், அண்ணாசாலை தபால் நிலையம் அருகே ஒரு கர்ப்பிணி பெண்ணை இடிக்கக்கூடிய சூழ்நிலை உருவானதாகவும் கூறப்படுகிறது. இதனால் கோபமடைந்த ராஜசேகர், வாகனத்தை நிறுத்துமாறு கூறி, ரைடை கேன்சல் செய்வதாக தெரிவித்தார். இதனால் ஆத்திரமடைந்த டிரைவர், ராஜசேகரை ஹெல்மெட்டால் தாக்கியதாகவும், பொதுமக்கள் மற்றும் போக்குவரத்து போலீசாரால் கிதியோன் தடுத்து பிடிக்கப்பட்டதாகவும் தெரிகிறது.
பின்னர், சிந்தாதிரிப்பேட்டை போலீசில் ஒப்படைக்கப்பட்ட கிதியோன் மீது ராஜசேகர் புகார் அளித்தார். விசாரணையில், கிதியோன் ராயபுரம் அப்பையர் லேன் பகுதியை சேர்ந்தவராகவும், அவர் மீது இரு திருட்டு வழக்குகள் நிலுவையில் இருப்பதும் தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் அவரை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.