புதுச்சேரி வம்பாகீரப்பாளையம் தெப்பக்குள வீதியில் வீரமணி என்பவர் வசித்து வந்துள்ளார். இவரது மகன் விக்கி (32). இவர் தனியார் உடற்பயிற்சி கூடத்தில் பயிற்சியாளராக இருந்தார். விக்கிக்கு பிரான்ஸ் நாட்டு பெண்ணுடன் திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. விரைவில் அவர் பிரான்ஸ் செல்ல திட்டமிட்டார்.

இந்த நிலையில் உறவினரான சுவாமிநாதன் என்பவரது இறுதி ஊர்வலத்தில் நேற்று மாலை விக்கி கலந்து கொண்டார். அப்போது திப்புராயன்பேட்டையை சேர்ந்த கார்த்திக், அசோக், ஸ்ரீகாந்த், பத்ரி மூர்த்தி ஆகியோருக்கும் விக்கிக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் கோபமடைந்த நான்கு பேரும் கற்களால் விக்கியின் தலையில் பலமாக அடித்தனர். இதனால் நிலைதடுமாறி  விக்கி கீழே விழுந்தார்.

இதனை தடுக்க முயன்ற விக்கியின் நண்பர் மூர்த்தியையும் கல்லால் தாக்கியுள்ளனர். இதில் படுகாயமடைந்த இருவரையும் அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விக்கி இறந்தார். மூர்த்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்த கொலை தொடர்பாக 4 பேர் சரணடைந்தனர். அவர்களை ரகசிய இடத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் விக்கி தரப்பினர் கொலையாளிகளாக சந்தேகிக்கப்படும் ஒரு சிலரின் வீடுகளை அடித்து நொறுக்கினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு நிலவுகிறது. மேலும் விக்கி தரப்பினர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் நூற்றுக்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த துணை கலெக்டர் அங்கு சென்று பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.