
இந்தியாவில் உள்ள முன்னணி டெலிகாம் நிறுவனங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் போன்ற நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்தி சமீபத்தில் அறிவித்தது. நாடாளுமன்றத் தேர்தல் முடிவடைந்த பிறகு டெலிகாம் நிறுவனங்கள் ரீசார்ஜ் கட்டணங்களை உயர்த்தும் என்று செய்திகள் வெளியான நிலையில் ஜியோ நிறுவனம் முதலில் கட்டணத்தை உயர்த்துவதாக அறிவித்தது.
இதைத்தொடர்ந்து airtel மற்றும் vodafone ஆகிய நிறுவனங்களும், கட்டணங்களை உயர்த்துவதாக அறிவித்தது. இந்நிலையில் சுமார் 47 கோடி மொபைல் சந்தாதாரர்களுடன் இந்தியாவில் முதலிடத்தில் இருக்கும் ஜியோ நிறுவனம் 12 முதல் 27 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், ஏர்டெல் நிறுவனம் 10 முதல் 21 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்தியது. இந்நிலையில் தற்போது ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களின் புதிய ரீசார்ஜ் கட்டண உயர்வு இன்று முதல் அமலுக்கு வந்துள்ளது. மேலும் வோடபோன் கட்டண உயர்வு நாளை முதல் அமலுக்கு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.