கர்நாடக மாநிலம் சிக்கபல்லாபூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகாவிலுள்ள அரசு பள்ளியில், கடந்த ஆண்டு மார்ச் 6ஆம் தேதி நடந்த ஒரு துயரமான சம்பவத்தில், 6 வயது சிறுவன் யஷ்வந்த் தனது வலது கண்ணின் பார்வையை நிரந்தரமாக இழந்துள்ளார்.

வகுப்பறையில் மாணவர்களை கட்டுப்படுத்த முயன்ற ஆசிரியர் குச்சியை மாணவர்கள் மீது வீசியதாக கூறப்படுகிறது. அது தவறுதலாக யஷ்வந்தின் வலது கண்ணில் விழுந்து, கடுமையான காயத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் பெற்றோர் இதை பெரிய விஷயமாக நினைக்கவில்லை.

ஆனால் நாட்கள் கழித்து அவரது நிலை மோசமானதை கவனித்த பெற்றோர், முதலில் சிந்தாமணியில் உள்ள கண் மருத்துவரிடம் அழைத்துச் சென்றனர். பின்னர் மாவட்ட மருத்துவமனை, மேலும் பெங்களூருவில் உள்ள விக்டோரியா மருத்துவமனையில் இரு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டது.

ஆனால் எந்த சிகிச்சையும் பயனளிக்காத நிலையில், சிறுவனின் பெற்றோர் பின்னர் பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் மருத்துவர்களின் பரிசோதனையை செய்தனர்.

அவர்களின் மதிப்பீட்டில், யஷ்வந்த் தனது வலது கண் பார்வையை நிரந்தரமாக இழந்துவிட்டதாக உறுதி செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து, பெற்றோர் மற்றும் கிராம மக்கள் இணைந்து பட்டலஹள்ளி காவல் நிலையத்திற்கு வெளியே ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

பெற்றோர் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த ஆசிரியர் மற்றும் தாலுகா கல்வி அலுவலர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் புதிய பிரிவுகள் மற்றும் சிறுவர் நலச்சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.