
மதுரை மாவட்டத்திலுள்ள ஒத்தக்கடை பகுதியில் ஒரு தனியார் ஜெராக்ஸ் கடை அமைந்துள்ளது. இந்த கடையில் இளம் பெண் ஒருவர் வேலை பார்த்து வருகிறார். இந்த பெண்ணை அதே பகுதியை சேர்ந்த சித்திக் ராஜா என்பவர் காதலித்துள்ளார். வாலிபர் ஒருதலையாக பெண்ணை காதலித்த நிலையில் தன்னை காதலிக்குமாறு தொடர்ந்து இளம் பெண்ணுக்கு தொல்லை கொடுத்துள்ளார். இந்நிலையில் இன்று அந்தப் பெண் கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த நிலையில் சித்திக் ராஜா அங்கு சென்றார். அவர் நீண்ட நேரம் ஆக அந்த பெண்ணிடம் தன்னை காதலிக்குமாறு வற்புறுத்திய நிலையில் அந்த பெண் மறுப்பு தெரிவித்ததால் ஆத்திரத்தில் அந்த பெண்ணை கொடூரமாக அடித்து தாக்கினார். அந்த வாலிபரை அருகே இருந்த ஒரு நபர் தடுக்க முயற்சிக்கிறார்.
இருப்பினும் அந்த வாலிபர் நடத்திய கொலை வெறி தாக்குதலில் பெண்ணுக்கு முகம் மற்றும் தலை உள்ளிட்ட இடங்களில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில் தற்போது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். தற்போது காவல்துறையினர் இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள தலைமறைவான சித்திக் ராஜாவை வலை வீசி தேடி வருகிறார்கள். இது தொடர்பான சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் நேற்று தஞ்சாவூரில் பள்ளி வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த ஆசிரியர் ரமணியை ஒரு தலை காதலால் மதன் என்ற வாலிபர் வகுப்பறைக்குள் புகுந்து குத்தி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தற்போது இளம்பெண் ஒருவர் காதலிக்க மறுத்ததால் வாலிபர் கொலை வெறி தாக்குதல் நடத்தியது மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.