மும்பை-புனே ரயில்வே பாதையில் மங்கி ஹில் பகுதியின் அருகே ரயில்வே தடத்தின் அருகில் வைக்கப்பட்டிருந்த பிங்க் நிற சூட்கேஸில் பெண்ணொருவரின் அழுகிய சடலம் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பையிலிருந்து புனே நோக்கி சென்ற பயணியொருவர், மங்கி ஹில் புள்ளியை கடக்கும் போது தடத்தின் அருகே சந்தேகத்திற்கிடமான சூட்கேஸ் இருந்ததை பார்த்து ரயில்வே போலீசாருக்கு தகவல் அளித்துள்ளார். தகவலின் அடிப்படையில் லோனாவலா ரயில்வே போலீசார் விரைந்து வந்து சூட்கேஸை மீட்டு சோதனை செய்தனர்.

சூட்கேஸை திறந்தபோது, அதில் பெண் ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் இருந்தது. பின்னர் சடலம் உடற்கூறு பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மரணத்தின் காரணம் உடற்கூறு அறிக்கைக்கு பிறகு மட்டுமே உறுதி செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதை தொடர்ந்து அந்த பெண்ணின் அடையாளம் கண்டறிய போலீசார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதே போன்ற சம்பவம் ஏப்ரல் 1ஆம் தேதி மகாராஷ்டிராவின் பால்கர் மாவட்டத்தில் ஒரு சம்பவம் நடந்தது. வாங் நதியில் மிதந்த சந்தேகத்திற்கிடமான பையை கிராம மக்கள் கண்டதும் போலீசுக்கு தகவல் அளித்தனர்.

அந்தப் பையில் 20 வயது மதிக்கத்தக்க பெண்ணின் அழுகிய சடலம் கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.