விழுப்புரம் மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த ராஜேஷ் மற்றும் செல்லம்மாள் தம்பதியினருக்கு இரண்டு வயதில் ஒரு பெண் குழந்தையும் பத்து மாத பெண் குழந்தை ஒன்றும் உள்ளது. ராஜேஷின் பெற்றோர் குன்றத்தூர் அடுத்த தெற்கு மலையம்பாக்கம் பகுதியில் உள்ள செங்கல் சூலையில் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் அவர்களின் கடனை அடைக்க கடந்த சில நாட்களுக்கு முன்பு ராஜேஷ் தனது குடும்பத்தினருடன் செங்கல் சூலையில் தங்கி பணியாற்றியுள்ளார்.

இதனிடையே இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு செம்பரம்பாக்கம் ஏரிக்கரையை ஒட்டிய பகுதியில் ராஜேஷ் நடந்து சென்று கொண்டிருந்தபோது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மூன்று பேர் அவரை கத்தியால் வெட்டிவிட்டு அவரிடமிருந்து செல்போன் மற்றும் பணம் ஆகியவற்றைப் பறித்துச் சென்றனர். இதனைத் தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ராஜேஷ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

பிறகு வழக்கு பதிவு செய்து போலீசார் நடத்திய விசாரணையில் தெற்கு மலையம்பாக்கத்தை சேர்ந்த விஜய் (23), பொன்னேரியை சேர்ந்த திருமலை (19), 14 வயது சிறுவன் என மூன்று பேரை கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த போது செம்பரம்பாக்கம் ஏரிக்கரையின் அருகே அமர்ந்து மது அருந்தி கொண்டிருந்தபோது அங்கு வந்த ராஜேஷை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செல்போன் கேட்டு தராததால் அவரை வெட்டிவிட்டு செல்போன் மற்றும் பணத்தை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர். இதனைத் தொடர்ந்து மூன்று பேரையும் கைது செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.