கன்னியாகுமரி மாவட்டம் கடுக்கரை ஆவடி காலனி பகுதியில் சுரேஷ்குமார் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகி மனைவி மற்றும் 2 மகள்கள் இருக்கும் நிலையில் சுரேஷ்குமார் அடிக்கடி மது குடித்துவிட்டு வந்து தகராறு செய்ததால் மனைவி மற்றும் ஒரு மகள் கணவரை பிரிந்து தனியாக சென்று விட்டனர். அதன் பிறகு அவருடைய மூத்த மகள் ஆர்த்தி (21) மட்டும் தந்தையுடன் வசித்து வந்தார். இந்நிலையில் கடந்த 26 ஆம் தேதி சுரேஷ்குமார் வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.

இது குறித்த தகவலின் பேரில் காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்திய போது மது போதையில் தன்னுடைய தந்தை இறந்து விட்டதாக ஆர்த்தி அவர்களிடம் கூறினார். அதன்பிறகு அவருடைய உடலை மீட்டு  காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் அவருடைய தலை மற்றும் கழுத்தில் காயம் இருப்பது தெரிய வந்ததால் காவல்துறையினர் கொலை வழக்காக மாற்றி ஆர்த்தியிடம் விசாரணை நடத்தினர்.

அப்போது ஆர்த்தி தன் தந்தையை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அதாவது தினம் தோறும் அவர் மது குடித்து விட்டு வந்து ஆர்த்தியிடம் தகராறு செய்ததோடு அவதூறான வார்த்தைகளால் பேசி திட்டியுள்ளார். இதனால் சம்பவம் நடந்திருக்கும் முந்தைய நாள் கோபத்தில் ஆர்த்தி தன் தந்தையை கீழே தள்ள சுவரில் மோதி அவருடைய தலையில் காயம் ஏற்பட்டுள்ளது.

இதே போன்று மறுநாளும் அவர் தகராறு செய்ததால் கோபத்தில் கழுத்தை நெரித்துள்ளார். இதனால் செய்வதறியாது தன் தந்தை மதுபோதையில் மயங்கி விழுந்து உயிரிழந்து விட்டதாக
கூறியுள்ளார். இது காவல்துறையினர் நடத்திய முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் ஆர்த்தியை காவல்துறையினர் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.