தமிழ்நாட்டில் உள்ள பிரசித்தி பெற்ற கோவில்களில் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலும் ஒன்று. இந்த கோவில் விருதுநகர் மாவட்டத்தில் அமைந்துள்ள நிலையில் தமிழகம்  மட்டும் இன்றி  வெளிமாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் தினசரி வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இந்நிலையில் தற்போது இந்து அறநிலையத்துறை ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலுக்குள் செல்போன் பயன்படுத்த தடை விதித்துள்ளது.

ஏற்கனவே திருச்செந்தூர் முருகன் கோவில், பழனி மற்றும் மதுரை மீனாட்சி அம்மன் கோவில் ஆகியவற்றில் செல்போன் பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தற்போது இதேபோன்று ஆண்டாள் கோவிலிலும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இதற்காக செல்போன் பாதுகாப்பு அறை  ஏற்படுத்தப்பட்டு பக்தர்கள் தரிசனம் முடிந்து வரும் வரை அங்கு பாதுகாப்பாக வைத்திருக்கப்படும். இதற்கு கட்டணமாக 5 ரூபாய் வசூலிக்கப்படும். மேலும் இந்த புதிய உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்துள்ளது.