
தமிழகத்தில் ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு புதிய செயல்முறையை தமிழ்நாடு போக்குவரத்து மற்றும் சாலை பாதுகாப்பு ஆணையர் அறிவித்துள்ளார். அதன்படி 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் புதிதாக ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு மற்றும் ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிப்பதற்கு இனி மருத்துவ சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். புதிதாக ஓட்டுனர் உரிமம் வாங்க விரும்புவர்கள் மற்றும் புதுப்பிக்க நினைப்பவர்கள் பதிவு பெற்ற மருத்துவர்களிடம் முறையான மருத்துவ சான்றிதழை பெற வேண்டும்.
இந்நிலையில் சிலர் தகுதியான மருத்துவ சான்றிதழுக்கு பதிலாக போலி மருத்துவர்களிடம் போலி மருத்துவர் சான்றிதழ் வாங்கி சாரதி இணையதளத்தில் பதிவேற்றம் செய்தது தெரிய வந்த நிலையில் தற்போது முறையான மருத்துவர்கள் மட்டுமே சாரதி மென்பொருளில் மருத்துவ சான்றிதழை கையேற்றும் விதமான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்த சாரதி இணையதளத்தில் மருத்துவர்கள் தங்களுடைய விவரங்களை உள்ளீடு செய்வது குறித்தும், தங்களுடைய பதிவுகளை உறுதி செய்வதும் குறித்தும், தெரிந்துகொள்ளும் விதமாக ஒரு செயல்முறை விளக்கம் அளிக்கப்பட இருக்கிறது. அதன்படி வருகின்ற 11ஆம் தேதி காலை 11 மணியளவில் வட்டார போக்குவரத்து அதிகாரிகள் ஒரு செயல்முறை விளக்கம் அளிக்க இருக்கிறார்கள். மேலும் இதன் மூலம் தங்களுடைய பதிவுகளை இறுதி செய்வது தொடர்பாக மருத்துவர்கள் தெரிந்து கொள்ளலாம்.