
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துவிட்ட நிலையில் இன்று மற்றும் நாளை மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவும் நிலையில், தெற்கு ஆந்திராவை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்க சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக இன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக இன்று 18 மாவட்டங்களில் தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அந்த வகையில் இன்று கன்னியாகுமரி மற்றும் திருநெல்வேலி ஆகிய இரு மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பிறகு ராமநாதபுரம், தூத்துக்குடி, தென்காசி, சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை, விருதுநகர், திருச்சி, திண்டுக்கல், தேனி, கரூர், ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதேபோன்று தமிழ்நாட்டில் நாளையும் பல்வேறு மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. அதன்படி கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி, திண்டுக்கல், விருதுநகர், மதுரை, ஈரோடு, திருப்பூர், கோவை மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னையை பொருத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேக மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.