
தமிழகத்தில் சமீப காலமாக படுகொலை சம்பவங்கள் என்பது அதிகரித்துவிட்ட நிலையில் இதற்கு எதிர்கட்சிகள் பலவும் திமுக அரசை சரமாரியாக விமர்சித்து வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் 24 மணி நேரத்தில் அடுத்தடுத்து 4 படுகொலை சம்பவங்கள் அரங்கேறியுள்ளது. அதாவது நேற்று இரவு தர்மபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே அமைந்துள்ள ஒரு பிரியாணி கடைக்குள் புகுந்து அங்கு பணிபுரிந்த ஊழியரை சரமாரியாக மர்ம நபர்கள் வெட்டி படுகொலை செய்தனர். இதேபோன்று சிவகங்கையைச் சேர்ந்த பாஜக கட்சியின் பிரமுகர், கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சி கவுன்சிலரின் கணவர் ஆகியோரும் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
அதோடு இன்று கடலூர் மாவட்டத்தில் அதிமுக வார்டு செயலாளராக இருக்கும் பத்மநாதன் என்பவரும் புதுச்சேரியில் வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் தமிழ்நாட்டில் அதிகரிக்கும் படுகொலை சம்பவங்களுக்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, தமிழகத்தில் கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் தொடர்ச்சியாக அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் கொலை நடக்காத நாளே இல்லை என்று கூறும் அளவிற்கு கொலை நகரமாக மாறி வருகிறது. மேலும் தமிழ்நாட்டில் அரசியல் கட்சியின் பிரமுகர்களுக்கும் பொதுமக்களுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது என்று கூறியுள்ளார். எனவே இனியாவது காவல்துறைக்கு முழு தைக்கரம் வழங்க வேண்டும் என்று கூறியுள்ளார்.