தமிழகத்தில் ரேஷன் கார்டுகள் மூலமாக ஏழை எளிய மக்களுக்கு அரிசி மற்றும் பருப்பு போன்ற பல அத்தியாவசியமான பொருள்கள் மலிவு விலையில் வழங்கப்படுகிறது. அதோடு அரசின் பல திட்டங்களும் ரேஷன் கார்டுகள் மூலமாக மக்களை சென்றடைகிறது. இதனால் ரேஷன் கார்டுகள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் மிகவும் அத்தியாவசியமான ஒன்றாக இருக்கிறது. அந்த வகையில் தமிழகத்தில் லட்சக்கணக்கானோர் ரேஷன் கார்டுக்காக விண்ணப்பித்துள்ளனர். அதில் பல விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு புதிய ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணிகளும் நடைபெற்று வரும் நிலையில் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட்டதால் ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.

இந்நிலையில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்குவது தொடர்பாக தற்போது தமிழக அரசு முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. சுமார் 2.80 லட்சம் பேர் புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்திருந்த நிலையில் முதல் கட்டமாக 92 ஆயிரம் பேருக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாம். இதனால் 80,000 பேருக்கு புதிய ரேஷன் கார்டுகள் வழங்கும் பணி தொடங்கப்பட்டுள்ளதோடு மீதமுள்ளவர்களுக்கும் விரைவில் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நிராகரிக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் மீண்டும் உணவு வழங்கல் துறையில் விண்ணப்பிக்கலாம். அவர்களுக்கு பரிசீலனை செய்து புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். அதோடு புதிய ரேஷன் கார்டுகள் வாங்கியவர்கள் அடுத்த மாதம் முதல் நியாய விலை கடைகளில் பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.