தமிழகத்தில் கன்னியாகுமரி, ராணிப்பேட்டை,  ஈரோடு, திருப்பத்தூர் உள்ளிட்ட நான்கு மாவட்டங்களில் 30 வயதை கடந்த பெண்களுக்கு பொது சுகாதார துறை சார்பாக மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது,  இதில் சுமார் 1.21 லட்சம் பெண்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டதில் 4027 பேருக்கு புற்றுநோய் அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து அவர்களுடைய திசு மற்றும் ரத்த மாதிரிகள் உயர் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளதாக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் தெரிவித்துள்ளார்.

ஆரம்ப நிலையில் புற்றுநோய் கண்டறிந்து அதனை வேரறுப்பது தான் இந்த திட்டத்தின் நோக்கம். பெண்களுக்கு பரவலாக ஏற்படும் மார்பக புற்றுநோய் மற்றும் கர்ப்பப்பை வாய் புற்றுநோய் தடுக்கும் பொருட்டு 30 வயதை கடந்த அனைத்து மகளிர்க்கும் அதற்கான மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன்  சட்டப்பேரவையில் சமீபத்தில் தெரிவித்திருந்தார் அதன்படி இந்தத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.