
தமிழகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாநில ஆலோசனை கூட்டம் நடைபெற்ற நிலையில் அந்த கூட்டத்தில் பேசிய முதல்வர் ஸ்டாலின், மாற்றுத்திறனாளிகளின் உரிமைகளை நிலைநாட்டும் விதமாக திமுக தலைமையிலான அரசு செயல்பட்டு வருகிறது. மாற்றுத்திறனாளிகளின் அடிப்படை உரிமைகளை காக்கும் விதத்தில் ஐந்து ஒப்பந்தத்தில் மத்திய அரசு கையெழுத்திட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு 64 கோடி அளவில் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்பட உள்ளது. தமிழகத்தில் இனி வரும் நாட்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான பராமரிப்பு உதவித்தொகை 2000 ரூபாயாக உயர்த்தப்படும்.
தமிழகத்தில் 22 மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகள் தற்போது செயல்பட்டு வரும் நிலையில் மனநல பாதிக்கப்பட்டவர்களின் நலனுக்காக இடைநிலை பராமரிப்பு மையம் மற்றும் மீண்டும் இல்லம் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் அறிவித்துள்ளார். அது மட்டுமல்லாமல் மாற்றுத்திறனாளிகளுக்கு அரசு குடியிருப்பில் தரைத்தளத்தில் வீடுகள் ஒதுக்கீடு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் முதல்வர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு மாற்றுத்திறனாளிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.