
சென்னைக்கு நேற்று இரவு பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயில் மதுரையில் இருந்து புறப்பட்டது. அந்த ரயிலில் சென்னையைச் சேர்ந்த ஒரு 24 வயது இளம்பெண் பயணம் செய்தார். இந்த ரயில் அதிகாலை 2.30 மணி அளவில் விழுப்புரம் அருகே சென்று கொண்டிருந்தது. அந்த இளம்பெண் நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தார். அப்போது மது போதையில் வாலிபர் ஒருவர் அந்த இளம் பெண்ணிடம் பாலியல் சில்மிஷத்தில் ஈடுபட்டார். இதனால் பயந்து போன அந்த இளம் பெண் கத்தி கூச்சலிட்ட நிலையில் உடனடியாக சக பயணிகள் அந்த வாலிபரை பிடித்து டிக்கெட் பரிசோதகருக்கு தகவல் கொடுத்தனர்.
அவர் உடனடியாக விழுப்புரம் ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அந்த வாலிபரை கைது செய்தனர். பின்னர் அவரிடம் நடத்திய விசாரணையில் அவருடைய பெயர் அருள்பாண்டி என்பது தெரிய வந்தது. மேலும் இவர் திருச்சியில் இருந்து சென்னைக்கு சென்ற நிலையில் ரயிலில் மது குடித்துள்ளார். ஏற்கனவே ஓடும் ரயிலில் வாலிபர் ஒருவர் கர்ப்பிணி பெண்ணிடம் பாலியல் தொல்லையில் ஈடுபட்டு கீழே தள்ளிவிட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இது போன்ற சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாவது பெரும் அதிர்ச்சிகரமானதாக அமைந்துள்ளது.