தமிழகத்தில் சமீபகாலமாக பள்ளிகளில் மாணவிகளுக்கு ஆசிரியர்களே பாலியல் தொல்லை கொடுக்கும் சம்பவங்கள் என்பது அதிகரித்து வருகிறது. இது தொடர்பான செய்திகள் அடிக்கடி வெளியாகி பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. வேலியே பயிரை மேய்ந்தார் போல ஆசிரியர்களே மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுப்பது என்பது மிகவும் வேதனையாகவும் அதிர்ச்சிகரமானதாகவும் இருக்கிறது. அந்த வகையில் தற்போது சேலத்தில் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த விவகாரத்தில் ஆசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதாவது சேலம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ஒரு அரசு பள்ளியில் ஏராளமான மாணவ மாணவிகள் படித்து வருகிறார்கள். இங்கு ஓவிய ஆசிரியராக சீனிவாசன் (59) என்பவர் பணிபுரிந்து வருகிறார். இவர் அந்த பள்ளியில் படிக்கும் 3 மாணவிகளுக்கு அடிக்கடி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். இது தொடர்பாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தங்களுடைய பெற்றோர்களிடம் கூறி கதறி அழுதனர். அதைக் கேட்டதும் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது புகார் கொடுத்தனர். மேலும் அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ஆசிரியர் சீனிவாசனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.