
AC உள்ளிட்ட மின்சாரக் கருவிகளை பயன்படுத்தினால் தண்டம் விதிக்கும் முடிவை, ஆய்வு நிலையிலேயே கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் ஏசி, ஹீட்டர் உள்ளிட்ட மின்சார கருவிகளை பயன்படுத்தும் வீடுகளில் அனுமதிக்கப்பட்ட அளவைவிட அதிக மின்சாரம் எடுக்கப்பட்டால் அதற்காக தேவை கட்டணம் என்ற பெயரில் தண்டம் விதிக்க மின்வாரியம் முடிவு செய்துள்ளது. இதற்காக மின்சார வாரிய விதிகளில் திருத்தம் செய்ய அனுமதி கோரி மின்சார ஒழுங்குமுறை ஆணையத்திடம் மின்சார வாரியம் விண்ணப்பித்துள்ளது கண்டிக்கத்தக்கது.
ஒரு வீட்டில் அனுமதிக்கப்பட்ட மின் அளவு 5 கிலோ வாட் ஆக இருந்து, அதைவிட அதிகமாக ஏழு கிலோவாட் அளவிற்கு மின்சாரம் எடுக்கப்பட்டால் எத்தனை முறை கூடுதல் மின்சாரம் எடுக்கப்படுகிறது அத்தனை முறையும் தண்டமாக கட்டணம் செலுத்த வேண்டும். இரண்டு மாத மின்சார கட்டணத்தில் ஒரு விழுக்காடு தண்டமாக பெறப்படும் ஒரு வருடத்தில் மூன்று முறைக்கு மேல் தண்டம் செலுத்தினால் அவர்கள் கூடுதல் வைப்புத்தொகை செலுத்த வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது பகல் கொள்ளைக்கு இணையானது என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.