
திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரியில் கல்லூரி மாணவரான சின்னதுரை மீது மீண்டும் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடந்த 2 வருடங்களுக்கு முன்பாக மாணவன் சின்னதுரை பள்ளியில் படித்துக் கொண்டிருக்கும் போது சக மாணவர்கள் சிலர் வீடு புகுந்து ஜாதி ரீதியான காரணத்திற்காக அரிவாளால் அவரை தாக்கினார்.
இதில் மாணவன் சின்னதுரை பலத்த காயமடைந்த நிலையில் பின்னர் மீண்டு வந்து 12 ஆம் வகுப்பு தேர்வில் தேர்ச்சி அடைந்து பின்னர் காலேஜில் சேர்ந்தார். இந்நிலையில் இன்ஸ்டாகிராம் உள்ள ஆன்லைனில் பழகிய சில நண்பர்கள் நெல்லை அறிவியல் மையத்திற்கு அருகே பணம் கேட்டு சின்னதுரை மீது தாக்குதல் நடத்தினர். ஆனால் சின்னதுரையிடம் பணம் இல்லாததால் அவரின் செல்போனை பறித்துவிட்டு அவரை கொடூரமாக தாக்கிவிட்டு அங்கிருந்து ஓடி விட்டனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில் மாணவன் சின்னதுரை மீது தாக்குதல் நடத்தியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பலரும் வலியுறுத்திய நிலையில் தனிப்படைகள் அமைத்து போலீசார் குற்றவாளிகளை வலை வீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் மாணவன் சின்னதுரையை தாக்கிய 5 பேரில் தற்போது இருவரை போலீசார் கைது செய்துள்ளனர். அதன்படி சக்திவேல் மற்றும் சங்கரநாராயணன் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களிடம் இருந்து இரண்டு செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இவர்கள் instagram மூலம் சின்னதுரையிடம் நட்பாக பழகி பணம் பறிக்கும் நோக்கத்தில் தனியாக வரவழைத்துள்ளனர் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் இந்த வழக்கில் தலைமறைவாக உள்ள 3 பேரை தனிப்படை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகிறார்கள்.