பொதுவாக இளம் பெண்களிடம் வெளிநாடுகளுக்கு சென்று ஹோட்டல்களில் நடனமாடினால் கைநிறைய சம்பாதிக்கலாம் என ஆசை காட்டி அவர்களை விபச்சாரத்தில் தள்ளும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. அந்த வகையில் இது போன்ற ஒரு கொடுமையில் சிக்கி தப்பித்து வெளியே வந்த ஒரு பெண் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் பரபரப்பு புகாரினை கொடுத்துள்ளார்‌. அதில் ஒரு குறிப்பிட்ட விபச்சார கும்பல் பெண்களை அழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்துகிறார்கள். அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டிருந்தது.

அதன் பிறகு கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் இளம் பெண்ணின் புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விபச்சார தடுப்பு பிரிவு காவல்துறையினருக்கு உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரித்ததில் ஆபியா (24), ஜெயக்குமார் (40), பிரகாஷ் ராஜ் (24) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் ஏராளமான இளம் பெண்களை ஏமாற்றி வெளிநாடுகளுக்கு அனுப்பி அவர்களை விபச்சாரத்தில் தள்ளி உள்ளனர். இந்த வழக்கில் தொடர்புடைய இன்னும் 4 முக்கிய குற்றவாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள். மேலும் வெளிநாடுகளுக்கு நடனமாட வருமாறு இளம் பெண்களை அழைத்து அவர்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்திய சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.