தமிழ்நாட்டில் ஆன்லைன் விளையாட்டுகளால் ஏற்படும் பாதிப்புகளை கட்டுப்படுத்தும் நோக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு “தமிழ்நாடு ஆன்லைன் சூதாட்ட தடை மற்றும் ஆன்லைன் விளையாட்டு ஒழுங்குமுறை சட்டம்” நிறைவேற்றப்பட்டது. அதன் அடிப்படையில் பிப்ரவரி 14ஆம் தேதி அரசிதழில் வெளியான அறிவிப்பில், ஆதார் இணைப்பு கட்டாயமாக்கப்பட்டதோடு, நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை ஆன்லைன் விளையாட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதை எதிர்த்து, சில ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளன. இவ்வழக்கில், தமிழக அரசின் தரப்பில் வக்கீல் அரவிந்த் ஸ்ரீவட்சன் பதில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில், 2019 முதல் 2024 வரை ஆன்லைன் விளையாட்டுகள் காரணமாக 47 பேர் தற்கொலை செய்துள்ளனர் என கூறப்பட்டுள்ளது. இளைஞர்களின் நலனை கருத்தில் கொண்டு, தூக்கமின்மை, உளவியல் பாதிப்பு போன்ற தாக்கங்களை தவிர்க்கவே நேரக் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சிறுவர்கள் இந்த விளையாட்டுகளில் ஈடுபடாமல் இருக்க ஆதார் அடிப்படையிலான சரிபார்ப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இது தனியுரிமையை பாதிக்காது என்றும், பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் இந்த நடவடிக்கையை வெகுவாக வரவேற்றுள்ளனர் என்றும் அரசு தரப்பில் விளக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கின் இறுதி விசாரணை மார்ச் 27ஆம் தேதி நடைபெறவுள்ளது.