
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பரவல் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். ஜனவரி மாதம் முதல் இதுவரை 11,743 பேர் டெங்கு பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாகவும், நேற்று மட்டும் 205 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இதுவரை 4 பேர் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில், டெங்கு பரவலை கட்டுப்படுத்த அனைத்து தரப்பு மக்களும் ஒத்துழைக்க வேண்டும் என அமைச்சர் கேட்டுக்கொண்டுள்ளார். வீடுகளில் தண்ணீர் தேங்காமல் பார்த்துக் கொள்ள வேண்டும், கொசுக்கள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
டெங்கு காய்ச்சல் குறித்து மக்கள் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். காய்ச்சல், தலைவலி, உடல் வலி போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அறிவுறுத்தியுள்ளது.