விசிக கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா அந்த கட்சியிலிருந்து ஆறு மாத காலம் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இவர் தொழிலதிபர் லாட்டரி கிங் மார்ட்டின் மருமகன். அதாவது அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவின்போது திமுகவுக்கு எதிராக அவர் பேசியதோடு விஜய்க்கு ஆதரவாக பேசினார். இதன் காரணமாக கட்சி நலனுக்கு எதிராக ஆதவ் அர்ஜூனா செயல்படுவதாக கூறி அவரை கட்சியிலிருந்து திருமாவளவன் நீக்கினார். அதன் பிறகு ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்ட ஆதவ் அர்ஜூனா தன்னுடைய கருத்தில் உறுதியாக இருப்பதாகவும் கண்டிப்பாக தொடர்ந்து ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்பதை வலியுறுத்துவேன் என்றும் கூறினார். இந்நிலையில் தற்போது மீண்டும் ஒரு எக்ஸ் பதிவை வெளியிட்டுள்ளார்.

அதில் ஒரு வீடியோவையும் ஆதவ் அர்ஜுனா இணைத்துள்ளார். அந்த பதிவில், ஆட்சியிலும் பங்கு அதிகாரத்திலும் பங்கு என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் உருவாக்குவோம் என்று பதிவிட்டுள்ளார். அதன் பிறகு அந்த வீடியோ பதிவில் ‌ முதல்வர் ஸ்டாலினின் மருமகன் ‌ சபரீசன் உடன் இருக்கும் புகைப்படத்தை அவர் பகிர்ந்துள்ளார். அதில் ஆதவ் அர்ஜுனாவின் ஒன் மைன்டு நிறுவனம் தான் திமுகவுக்கு தேர்தல் வியூகம் வகுத்துக் கொடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.