
சென்னையை சேர்ந்த மஹ்மூத் அக்ரம்(19), உலகளவில் கவனத்தை ஈர்த்திருக்கும் அதிசய மொழி நிபுணர். இவர் 400 மொழிகளில் வாசிக்க, எழுத, டைப் செய்யும் திறனும், அதில் 46 மொழிகளை சுலபமாக பேசும் திறனும் பெற்றுள்ளார். இந்தத் தனித்திறமை அவருக்கு உலக சாதனைகள், விருதுகள் மற்றும் பல்வேறு நாடுகளிலிருந்து பாராட்டுக்களையும் கிடைக்கச் செய்துள்ளது. “அவரது திறமை வெறும் அறிவுக்கூர்மையல்ல, அதிசயமான ஆளுமை” என பலரும் புகழுகின்றனர்.
மொழிகளின் மீது காதல், அக்ரமுக்கு சிறுவயதில் இருந்தே இருந்தது. அவரின் தந்தை 16 மொழிகளில் பேசக்கூடியவர். வேலைக்காக பல்வேறு நாடுகளுக்கு செல்லும்போது மொழித் தடைகள் என்னை அதிகம் பாதித்தன. எனவே என் மகனுக்கு மொழி ஒரு தடையாக இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற எண்ணமே இந்த பயணத்தைத் துவக்க வைத்தது” என அவர் கூறுகிறார். அக்காலத்தில் அக்ரம் நான்கு வயதில் ஆங்கில அகராதியை ஆறு நாளில் கற்றுக்கொண்டார்; தமிழ் எழுத்துக்களை மூன்று வாரத்தில் முழுமையாகக் கற்றார்.
அதன்பின், வட்டெழுத்து, கிரந்தம், தமிழி போன்ற தமிழின் பண்டைய எழுத்து முறைகளை தந்தை அறிமுகப்படுத்த, அவற்றையும் குறுகிய காலத்திலேயே கற்றுக்கொண்டார். ஆறாம் வயதுக்குள் தந்தையைவிட மொழி அறிவில் மேம்பட்டதாகவும், எட்டாம் வயதுக்குள் 50 மொழிகளில் நிபுணராக மாறியதாகவும் அக்ரம் கூறுகிறார். அந்த நேரம் பல மொழிகளில் தட்டச்சு செய்து யூடியூபில் வீடியோ வெளியிட்டு உலக சாதனை படைத்தார். பஞ்சாபில் இருந்து ஒரு சாதனை அமைப்பு அவரை அழைத்து, மிக இளம் பன்மொழித் தட்டச்சராகச் சான்றளித்தது.
பத்தாம் வயதில் அவர், இந்திய தேசிய கீதத்தை ஒரு மணி நேரத்திற்குள் 20 மொழிகளில் எழுதி, தனது இரண்டாவது உலக சாதனையைப் பெற்றார். ஜெர்மனியில் நடைபெற்ற “யங் டேலண்ட் அவார்டு” போட்டியில் 70 மொழி நிபுணர்களுடன் போட்டியிட்டு வென்றார். பின்னர், ஒரு திறமையாளர்களுக்கான நிகழ்ச்சியில் பங்கேற்றதால், ஐரோப்பிய நாட்டில் கல்வி பயில வாய்ப்பு கிடைத்தது. தற்போது அக்ரம், ஆங்கில இலக்கியத்தில் BA, அனிமேஷனில் B.Sc மற்றும் UK ஓபன் யுனிவர்சிட்டியில் மொழியியல் பட்டப்படிப்பு என பல படிப்புகளை ஒரே நேரத்தில் மேற்கொண்டு வருகிறார். “தமிழ் எனது தாய்மொழி; அதற்கான பாசம் எனக்குள் என்றும் இருப்பது மிகவும் சிறப்பான உணர்வு” என அகரம் பெருமையுடன் கூறியுள்ளார்.