
தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் தற்போது அனைத்து கட்சிகளுக்கும் போட்டியாக நடிகர் விஜய் தமிழக வெற்றிக்கழகம் என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியலில் களமிறங்கியுள்ளார். கட்சியின் முதல் மாநாட்டில் இருந்தே திமுகவை விமர்சித்து வரும் விஜய்க்கு இன்று Y பிரிவு பாதுகாப்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இப்படியான நிலையில் கிருஷ்ணகிரியில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய அதிமுகவின் பொதுச் செயலாளர் கே.பி முனுசாமி, ஒரு கட்சியின் தலைவராகவும் நடிகராகவும் இருக்கக்கூடிய விஜய் செல்லும் இடத்தில் கூட்டம் சேரும் என்ற அடிப்படையில் அவருக்கு Y பிரிவு பாதுகாப்பு பெருந்தன்மையாக கொடுத்திருந்தால் அது மகிழ்ச்சி தான். ஆனால் அரசியல் ரீதியாக சுயநலத்தோடு விஜயை தன் பக்கம் இழுக்க அவரை மகிழ்ச்சிப்படுத்துவதற்காக இந்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தால் பாஜகவின் வரலாறு எது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.
ஒரு கட்சியில் பிளவு ஏற்படும் போது விதி 15 அடிப்படையில் சின்னங்கள் யாருக்கு ஒதுக்கப்பட வேண்டும் என்பதை மட்டும்தான் தேர்தல் ஆணையம் முடிவு செய்ய வேண்டும். உட்கட்சி விவகாரத்தில் உள்ளே நுழைய தேர்தல் ஆணையத்திற்கு எந்த ஒரு உரிமையும் கிடையாது. அதிமுகவை பொருத்தவரை தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தினால் அது மகிழ்ச்சி தான். உட்கட்சி விவகாரத்தில் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை நாங்கள் விமர்சிக்க விரும்பவில்லை என்று கே.பி முனுசாமி பேசியுள்ளார்.