விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா கட்சிக்கு எதிராக செயல்பட்டதாக கூறி அவரை திருமாவளவன் சஸ்பெண்ட் செய்த நிலையில் பின்னர் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அறிவித்தார். இதைத்தொடர்ந்து நேற்று விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து அவருக்கு தேர்தல் பிரச்சாரம் மேலாண்மை பொறுப்பு பொதுச்செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. அவர் தனக்கு பதவி வழங்கப்பட்ட சில மணி நிறங்களிலேயே திருமாவளவனை  நேரில் சென்று சந்தித்தார். ஆனால் இந்த சந்திப்பு மரியாதை நிமித்தமான சந்திப்பு என்று இருவரும் தெரிவித்துள்ள நிலையில் தமிழக வெற்றி கழகத்தில் இணைந்ததற்காக ஆதவ் அர்ஜுனாவுக்கு திருமாவளவன் வாழ்த்து தெரிவித்தார்.

இந்த சந்திப்புக்கு பிறகு ஆதவ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் பேசியதாவது, திருமாவளவனிடமிருந்து கொள்கை ரீதியாக மிகப்பெரிய கருத்துக்களை உள்வாங்கி நான் கள அரசியலை கற்றுக் கொண்டுள்ள நிலையில் என்னுடைய ஆசான் ஆன அவரிடம் ஆசி வாங்கிக்கொண்டு என்னுடைய களப்பயணத்தை தொடங்குவேன் என்று கூறி இருந்தேன். அதற்காகத்தான் தற்போது திருமாவளவனை சந்தித்து வாழ்த்து பெற வந்தேன். திருமாவளவன் சொன்னபடி அம்பேத்கர் மற்றும் பெரியார் வழியில் என்னுடைய அரசியல் பயணம் இருக்கும். தமிழக வெற்றிக்கழகமும் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் எதிர எதிர் துருவங்கள் கிடையாது.

நாங்கள் ஒரே துருவத்தில் ஒரே கருத்தில் தான் இருக்கிறோம். கொள்கை அடிப்படையில் ஒற்றுமையாக இருக்கிறோம் என்று கூறினார். மேலும் ஏற்கனவே விடுதலை சிறுத்தைகள் கட்சியின் திருமாவளவனை விஜய் கூட்டணிக்கு அழைத்த நிலையில் தற்போது ஆதவர் அர்ஜுனா திருமாவளவனின் விஜயும் வேற வேற கிடையாது ஒன்னு தான் என்பது போல் விடுதலை சிறுத்தைகள் கட்சியும் தமிழக வெற்றிக்கழகமும் ஒரே கருத்துக்களை கொள்கைகளைக் கொண்ட கட்சி என்று கூறியுள்ளது தமிழக அரசியல் வட்டாரத்தில் பேசும் பொருளாக மாறி உள்ளது.