விருதுநகர் மாவட்டம் கீழ துலுக்கன் குளத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன்(35). இவர் பட்டப்படிப்பு முடித்துவிட்டு விவசாயம் பார்த்து வந்தார். ராஜேந்திரன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெற்று தனியாக பிரிந்து வாழ்ந்தார். இந்த நிலையில் ராஜேந்திரனுக்கும் கணவரை இழந்த முத்துலட்சுமி என்ற பெண்ணுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது.

இதனை அறிந்த முத்துலட்சுமியின் இளைய மகன் பிரபாகரன்(18) ராஜேந்திரனை கண்டித்துள்ளார். மேலும் கோபத்தில் தாயை பிரிந்து உறவினர் வீட்டில் தங்கி இருந்து ஜேசிபி ஆபரேட்டராக வேலை பார்த்து வந்தார். அதன் பிறகும் ராஜேந்திரனும், முத்துலட்சுமியும் நெருக்கமாக பழகி உள்ளனர். இதனால் கோபமடைந்த பிரபாகரன் தனது நண்பரான ராஜா(19) என்பவருடன் இணைந்து ராஜேந்திரனை இரும்பு கம்பியால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடினார்.

இதனால் படுகாயமடைந்த ராஜேந்திரனை அக்கம் பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே ராஜேந்திரன் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் பிரபாகரன், ராஜா ஆகிய இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.