ராமநாதபுரம் மாவட்டம் பார்த்திபனூரை சேர்ந்தவர் காளிதாஸ். இவர் சிவகாசியில் இருக்கும் பட்டாசு ஆலையில் தொழிலாளியாக பணிபுரிந்து வந்துள்ளார். இந்த நிலையில் காளிதாஸ் விஸ்வநத்தம் காமராஜர் காலணியைச் சேர்ந்த மாரீஸ்வரி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இந்த நிலையில் கணவன் மனைவிக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 4 மாதங்களுக்கு முன்பு மாரீஸ்வரி தனது தாய் வீரமணியின் வீட்டிற்கு வந்து விட்டார். நேற்று முன்தினம் காளிதாஸ் தனது மாமியார் வீட்டிற்கு சென்று சமாதானம் பேசி மனைவியை வீட்டிற்கு அழைத்துச் செல்ல முயன்றார்.

அப்போது மீண்டும் கணவன் மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த காளிதாஸ் வீரமணியை கத்தியால் குத்தி விட்டு அங்கிருந்து தப்பி சென்றார். இதனால் படுகாயமடைந்த வீரமணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று வீரமணியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் காளிதாசை கைது செய்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.