
கன்னியாகுமரி மாவட்டம் அமராவதி பகுதியில் மகேஷ் (38) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்த நிலையில் ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்தானவர். அதன் பிறகு ஷோபி (36) என்ற பெண்ணை கடந்த 5 மாதங்களுக்கு முன்பாக திருமணம் செய்து கொண்டார். இதில் ஷோபிக்கும் இரண்டாவது திருமணம் தான். இவர்கள் இருவரும் தக்கலை அருகே உள்ள ஒரு பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி வந்தனர். இதற்கிடையில் கடந்த 4 நாட்களுக்கு முன்பாக அவருடைய மனைவி சென்னையில் உள்ள பெற்றோர் வீட்டிற்கு சென்றுள்ளார். இதனால் வீட்டில் மகேஷ் மட்டும் தனியாக இருந்த நிலையில் நேற்று அவர் வீட்டில் ரத்த காயங்களுடன் பிணமாக கிடந்தார்.
இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி தக்கலை காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் மகேஷின் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் நடத்திய விசாரணையில் மனைவி இல்லாத சமயத்தில் தன் நண்பர்களை மகேஷ் மது குடிப்பதற்காக வீட்டிற்கு அழைத்துள்ளார். அவருடைய வீட்டில் பார்ட்டி நடந்த நிலையில் போதை தலைக்கேறியதும் அவர்களுக்குள் திடீரென தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நண்பர்கள் அனைவரும் சேர்ந்து மகேஷை கத்தியால் குத்தி கொலை செய்தது தெரியவந்துள்ளது. மேலும் இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி குற்றவாளிகளை தேடி வருகிறார்கள்.