
மத்தியப்பிரதேசம், டிகம்கர் மாவட்டம், பால்தேவ்கட் போலீஸ் நிலையம் எல்லைக்குட்பட்ட தால்மாவ் கிராமத்தில் மனதை உலுக்கும் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது. 70 வயதான சின்னா அஹிவார் என்பவர் உடல்நலக் கோளாறால் உயிரிழந்த நிலையில், அவரது மகன் ராஜு, சொத்து விஷயத்தில் ஏற்பட்ட கோபத்தால், தந்தையின் இறுதிச்சடங்கிலும் கலந்து கொள்ள மறுத்துவிட்டார். இதனால், சின்னாவின் உடல் சுமார் 23 மணி நேரம் வீட்டின் மண்டபத்தில் வைக்கப்பட்டிருந்தது.
தந்தையின் கடைசி நாட்களில் மகனான ராஜு எந்த உதவியும் செய்யவில்லை. ஆனால் மகள் சுனீதா, அன்புடனும் பராமரிப்புடனும் தந்தையை கவனித்திருந்தார். இதனால், சின்னா தனது 2 ஏக்கர் நிலத்தை மகள் பெயரில் ரெஜிஸ்டர் செய்து விட்டார். இதே விஷயமே ராஜுவுக்கு கடும் மனவேதனையாக மாறி, தந்தை மீதான கோபமாகி விட்டது. இதனால், தந்தை இறந்தபோதும், “நிலம் பெற்றவங்க தான் இறுதிச்சடங்கு செய்யட்டும்!” என ராஜு கூறியுள்ளார்.
இந்த சம்பவத்துக்கு பின்னர் போலீசார் தலையிட்டு மகளான சுனீதாவிடம் பேசி, ஒரு ஏக்கர் நிலத்தை ராஜுவுக்கு வழங்க தயாராக இருப்பதை அவர் தெரிவித்தார். ஆனால், ராஜு, வாய்மொழியில் ஒப்புக்கொள்ள மறுத்து, எழுதித் தந்தால் மட்டுமே இறுதிச்சடங்கு செய்வேன் என பிடிவாதமாக கூறினார். கடைசியாக, தாலுகா அலுவலகத்தில் எழுத்துப்பூர்வமாகப் பத்திரம் செய்யப்பட்ட பின், ராஜு தனது தந்தையின் சடலத்திற்கு தீயிட்டார். மேலும் சொத்துக்காக ஒரு மகன் தன் தந்தைக்கு செய்ய வேண்டிய இறுதி சடங்குகளில் கலந்து கொள்ள மாட்டேன் என கூறியது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.