செங்கல்பட்டு மாவட்டம் சிறுசேரியில் தனியார் ஐ.டி நிறுவனம் ஒன்று உள்ளது. இங்கு பீகாரைச் சேர்ந்த கவுசல் என்பவர் வாட்ச்மேனாக பணியாற்றி வந்தார். இந்நிலையில் வேலை முடிந்து செல்லும் பணியாளர்கள் வாடகை காரில் வீட்டுக்கு செல்வது வழக்கம். அப்போது கவுசலும் உடன் செல்வார்.

அதேபோன்று நேற்று இரவு ஒன்றரை மணியளவில் ஊழியர்கள் சிலர் வேலை முடிந்து வாடகை காரில் பல்லாவரம் நோக்கி பயணம் செய்தனர். அவர்களுடன் வாட்ச்மேன் கவுசலும் சென்றார். அப்போது காரை டிரைவர் ராஜசேகர் ஓட்டினார். இதையடுத்து ஊழியர்களை இறக்கி விட்டதும் கார் மீண்டும் சிறுசேரி நோக்கி வந்து கொண்டிருந்தது.

அந்நேரத்தில் பள்ளிக்கரணை அருகே சென்று கொண்டிருந்தபோது திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் உள்ள ஏரியில் பாய்ந்தது. இதில் காருக்குள் இருந்த ராஜசேகரும் வாட்ச்மேன் கவுசலும் வெளியே வர முடியாமல் சிக்கிக் கொண்டனர். காருக்குள் தண்ணீர் புகுந்ததால் வாட்ச்மேன் கவுசல் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் அருகில் உள்ள காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் ஏரிக்குள் பாய்ந்த காரை ஜே.சி.பி மூலம் மீட்டனர். அப்போது உயிருக்கு போராடிக் கொண்டிருந்த ராஜசேகரை மீட்டு சிகிச்சைகாக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.