
நீலகிரி மாவட்டத்தில் உள்ள காட்டேரி பகுதியில் மெஹ்ரூன் (70) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு 2 மகன்கள் இருக்கும் நிலையில் மூத்த மகன் பைரோஸ் (45) ஓட்டுனராக வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 5-ம் தேதி மெஹ்ரூன் விறகு சேகரிப்பதற்காக காட்டுப்பகுதிக்கு சென்றுள்ளார். அதன்பின் அவர் வீட்டிற்கு திரும்பாததால் அவருடைய இரு மகன்களும் பல்வேறு இடங்களில் தேடினர். இந்நிலையில் அப்பகுதியில் உள்ள காட்டுப்பகுதியில் மெஹ்ரூன் இறந்த நிலையில் கிடந்துள்ளார். இதைப் பார்த்த பைரோஸ் அதிர்ச்சியில் கதறி அழுதார்.
பின்னர் தன்னுடைய தாயை தூக்குவதற்காக சென்றார். அப்போது அவரை திடீரென மின்சாரம் தாக்கியது. அதாவது அங்குள்ள ஒரு புதரில் உயிர் அழுத்த மின்கம்பி அறுந்து கிடந்துள்ளது. இதை கவனிக்காமல் மெஹ்ரூன் மிதித்த நிலையில் அவர் மின்சாரம் தாக்கி உயிரிழந்துள்ளார். இதை அறியாமல் சென்ற அவருடைய மகனும் மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். இதில் படுகாயம் அடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் தொடர்பாக குன்னூர் நகர காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் அறுந்து விழுந்த மின் கம்பியை சரி செய்யும் பணிகளும் நடைபெற்று வருகிறது.