டெல்லியில் வியாழக்கிழமை, டாவூதி போஹ்ரா சமூகத்தினரைச் சேர்ந்த பிரதிநிதிகள் பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, வக்பு சொத்துகளின் மேலாண்மை மற்றும் சமூக நலத் திட்டங்கள் தொடர்பான விவரங்களைப் பற்றி கலந்துரையாடினர். சமீபத்தில் பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட வக்பு (திருத்த) சட்டம், 2025 இல் தங்களது நீண்டநாள் கோரிக்கைகள் சில அடங்கியுள்ளதாக கூறி, பிரதமருக்கு நன்றியும் தெரிவித்தனர். இந்தச் சந்திப்பில் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜூ உடனிருந்தார்.

இந்த சந்திப்பு குறித்து பிரதமர் மோடி தனது ‘எக்ஸ்’ பக்கத்தில், “டாவூதி போஹ்ரா சமூகத்தினருடன் அருமையான சந்திப்பு நடைபெற்றது. பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து உரையாடினோம்” எனக் குறிப்பிட்டார். மேலும், இந்த சமூகத்திற்கு வக்பு வாரியங்களில் பிரதிநிதித்துவம் வழங்குவது, சமூக நலத்திற்கான நடவடிக்கைகளில் சிறுபான்மைச் சிறுபான்மையினருக்கும் உரிய இடம் வழங்குவது உள்ளிட்ட முக்கிய மாற்றங்கள் இந்த சட்டத்தின் மூலம் சாத்தியமானதாக சமூகத்தின் உறுப்பினர்கள் தெரிவித்தனர். இந்த சட்ட திருத்தம், 100 ஆண்டுகளுக்கும் மேலான எதிர்பார்ப்பை நிறைவேற்றியதாகவும் அவர்கள் கூறினர் என்று பதிவிட்டுள்ளார்.