
மத்திய அரசு தேசிய கல்விக் கொள்கையை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நிலையில் தமிழக அரசு அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டது. மும்மொழி கல்விக் கொள்கையை ஏற்றுக் கொண்டால் மட்டும் தான் 2000 கோடி கல்விக்கான நிதியை தருவோம் என்று மத்திய அரசு கூறியுள்ளது. ஆனால் இருமொழி கொள்கை மட்டும் தான் என்றென்றும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் என்று திமுக அரசு திட்டவட்டமாக கூறிவிட்டது. இதனால் பாஜக மற்றும் திமுக இடையே கருத்து மோதல் என்பது அதிகரித்து விட்டது.
இந்த நிலையில் கோவை வடக்கு மாவட்ட பாஜக சார்பில் நடைபெற்ற பட்ஜெட் விளக்க பொதுக் கூட்டத்தில் மூத்த தலைவர் பொன் ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, திமுகவில் அமைச்சர் முதல் கவுன்சிலர் வரை சிபிஎஸ்இ பள்ளியை நடத்துகிறார்கள். இந்த பள்ளிகளில் மாணவர்களுக்கு ஹிந்தி பாடத்தை கற்றுக் கொடுக்கிறார்கள். அப்படி எனில் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளையும் மூடுவதற்கு தமிழக அரசு உத்தரவு போடுமா.? திமுக ஆட்சியில் தனியார் பள்ளிகளின் எண்ணிக்கை என்பது அதிகரித்ததால் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை குறைந்து வருகிறது.
தமிழ்நாட்டில் ஊழல் அற்ற ஆட்சி அமைய வேண்டும் என்றால் 2026 ஆம் ஆண்டு பாஜக தான் ஆட்சிக்கு வர வேண்டும் என்று கூறினார். மேலும் முன்னதாக அண்ணாமலை அண்ணா சாலைக்கு தனியாக வருகிறேன் என்று கூறிய நிலையில் துணிவிருந்தால் வாருங்கள் என்று உதயநிதி ஸ்டாலின் கூறியிருந்தார். அப்போது பொன் இராதாகிருஷ்ணன் அண்ணாசாலை என்ன ரெட்லைட் ஏரியாவா நாங்க வரக்கூடாது என்று சொல்வதற்கு என்று சர்ச்சையாக பேசி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.