விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி அரசு. இவர் சமீபத்தில் ஊடகம் ஒன்றுக்கு கொடுத்த ‌ பேட்டியின் போது 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் 25 தொகுதிகளை கேட்டு பெறுவோம் என்று கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது, திருமாவளவன் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் திமுக கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை தொடரும் என்று தெரிவித்துள்ளார்.

அதே சமயத்தில் என்னை போன்றவர்களின் மனநிலை எப்படி இருக்கிறது எனில் வருகிற 2026 ஆம் ஆண்டு தேர்தலில் 25 தொகுதிகளை விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்க வேண்டும் என்று திமுக கூட்டணியில் கேட்டு பெற வேண்டும். இது நம்முடைய கட்சிக்கான சரியான நேரம் என்று நினைக்கிறோம் என்றார். அதன் பிறகு ஆதவ் அர்ஜுனா ஆட்சி அதிகாரத்தில் பங்கு என்று பேசியதில் தவறு கிடையாது எனவும் இது விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கொள்கைகள் தான் என்றும் கூறினார்.

ஆனால் அதே சமயத்தில் புத்தக வெளியீட்டு விழாவில் திருமாவளவன் இதைப் பற்றி பேசக்கூடாது என்று கூறியும் அவர் அதனை மீறி பேசியதுதால் தான் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். பொதுவாக ஒருவர் கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்யப்படும்போது உயர் மட்ட குழு ஆலோசித்து அவரை மீண்டும் கட்சியில் சேர்த்துக் கொள்ளும். ஆனால் அதற்கான வாய்ப்பை ஆதவ் உருவாக்கிக் கொள்ளவில்லை.

மேலும் விஜய் பற்றிய கேள்விக்கு விஜய் இன்னும் அரசியல் களத்தில் இறங்காத நிலையில் அவருடைய அரசியல் களம் பனையூரில் மட்டும் தான் இருக்கிறது. அவர் இன்னும் அனைத்து களத்திலும் இறங்க வேண்டும். அவர் பிரிவினைவாதம், மதவாதம் மற்றும் சனாதனத்துக்கு எதிராக நிற்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய இன்னொரு கருத்து என்று கூறினார்.

மேலும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 25 எம்எல்ஏக்கள் வேண்டும் எனவும் சட்டசபையில் எங்கள் காட்சி எம்எல்ஏக்கள் இரட்டை இலக்கத்தில் இருப்பார்கள் என்றும் அவர் கூறியது தற்போது கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.