
திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் என உறுதி அளிக்கிறேன் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
ஒருநாள் பயணமாக பிரதமர் நரேந்திர மோடி தமிழகத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக இன்று சென்னை வந்தார். பிரதமர் மோடியை அமைச்சர் காந்தி, சென்னை மேயர் பிரியா உள்ளிட்டோர் வரவேற்றனர். இதையடுத்து விமான நிலையத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் கல்பாக்கம் ஹெலிபேடு மையத்திற்கு பிரதமர் மோடி சென்றார். இதனைத்தொடர்ந்து கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஈணுலை திட்டத்தை தொடங்கி வைத்த பின் ஹெலிகாப்டர் மூலம் மீண்டும் சென்னை விமான நிலையம் வந்த பிரதமர் நரேந்திர மோடி, பின்னர் சாலை மார்க்கமாக சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் பாஜக சார்பாக நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் பங்கேற்றார்.
இந்த கூட்டத்தில், ‘வணக்கம் சென்னை’ என தனது உரையை தொடங்கினார் பிரதமர் மோடி. இந்த பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, ஒவ்வொரு முறை சென்னை வரும் போதெல்லாம் எனக்கு சக்தி வருகிறது. திறமை, வர்த்தகம், பாரம்பரியம் உள்ளிட்டவற்றின் முக்கிய புள்ளியாக சென்னை விளங்குகிறது. வளர்ச்சியடைந்த இந்தியாவிற்கு சென்னை வாசிகள் முக்கிய பங்கு வகிக்கிறார்கள். சமீபகாலமாக தமிழ்நாட்டுக்கு வரும் போதெல்லாம் சிலருக்கு வயிற்று வலி ஏற்படுகிறது. எனக்கும், தமிழ்நாட்டிற்கும் இடையிலான உறவு மிகவும் பழமையானது. தமிழ்நாட்டில் பாஜகவிற்கு மக்களின் ஆதரவு பெருகி வலிமை அடைந்து வருவதால் சிலருக்கு எனது வருகை பயத்தை தருகிறது. வளர்ச்சி அடைந்த பாரதத்துடன் வளர்ச்சி அடைந்த தமிழ்நாடு எனது இலக்கு .
இந்தியாவை உலகின் 3வது பெரிய பொருளாதாரமாக்க தமிழகத்தின் பங்களிப்பு அவசியம். சென்னை மெட்ரோ, விமான நிலைய விரிவாக்கம், மதுரவாயல் பறக்கும் சாலை திட்டங்கள் முக்கியம். மத்திய அரசின் திட்டங்களால் சென்னையில் புதிய கட்டுமானங்கள் பெருகி உள்ளது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களுக்கு திமுக மேலும் துயரத்தை கொடுத்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சென்னை மக்களை திமுக அரசு கண்டு கொள்ளவில்லை. சென்னையில் திமுக அரசு நிர்வாகிகள் மீடியாக்களை நிர்வகிக்கின்றது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு சென்னை வாசிகள் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்தது. சென்னையில் பாலும், தேனும் ஓடுவதாக மீடியாக்களை திமுக அரசு சரி கட்டுகிறது. மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாட்டில் செயல்படுத்த திமுக அரசு இடையூறாக இருக்கிறது.
இயற்கை பேரிடர் ஏற்பட்ட போது துன்பத்தில் இருந்த மக்களுக்கு திமுக அரசு உதவவில்லை. மக்களின் துயரம் குறித்து திமுக அரசுக்கு கவலை இல்லை. தங்கள் அரசை பற்றி சுய விளம்பரம் செய்வதில் தான் கவனம். தமிழக மக்களின் துன்பங்களை, தேவைகளை மத்திய அரசு புரிந்து வைத்துள்ளது. ரேஷனில் இலவச அரிசி, கொரோனா பெருந்தொற்று காலத்தில் இலவச தடுப்பூசியை வழங்கியது பாஜக அரசு. இந்திய மக்கள் அனைவருக்கும் இலவசமாக கொரோனா தடுப்பூசி வழங்கியது. தமிழகத்தின் சிறுகுறு தொழில் நிறுவனங்களுக்கு மத்திய அரசு கணக்கில்லாமல் கடன் உதவி வழங்கியது.
இலட்சக்கணக்கான மக்களுக்கு மத்திய அரசின் திட்டங்கள் நேரடியாக சென்றடைவது தான் திமுக அரசின் மனக்குறை. மத்திய அரசின் திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என திமுக கோபத்தில் உள்ளது. மத்திய அரசின் உதவி ஏழை மக்களின் வங்கி கணக்கிற்கு செல்வதை திமுகவால் ஏற்க முடியவில்லை. லட்சக்கணக்கான கோடி ரூபாய் வளர்ச்சித் திட்டங்களில் ஊழல் செய்ய முடியவில்லை என திமுக அரசு வருந்துகிறது. தமிழக அரசின் மக்கள் பணத்தை திமுகவினர் கொள்ளை அடிக்க நான் விடமாட்டேன். திமுக கொள்ளையடித்த பணம் மீண்டும் வசூலிக்கப்பட்டு தமிழக மக்களுக்கு திருப்பி தரப்படும் என உறுதி அளிக்கிறேன். மத்திய அரசின் திட்டங்களில் திமுகவினர் தங்கள் ஸ்டிக்கர்களை ஒட்டுகின்றனர்” என தொடர்ந்து பேசி வருகிறார்.