
அரசுப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற சொற்பொழிவில் கல்விக்கும் அறிவியலுக்கும் முரணான கருத்துகள் பேசப்பட்ட சம்பவம் தமிழகத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் இது குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அதன்படி ,”அரசுப் பள்ளியில் சொற்பொழிவு என்ற பெயரில் கல்விக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத கருத்துகளை பேசிய விவகாரத்தில் நாங்கள் எடுக்கப்போகும் நடவடிக்கை தமிழ்நாட்டில் இதுபோன்ற நிகழ்வுகள் நடக்காத வகையில் ஒரு மிகப்பெரிய பாடமாக இருக்கும்” என்று அவர் கூறியுள்ளார்.
இந்நிலையில் சர்ச்சையை ஏற்படுத்திய மகா விஷ்ணு என்ற நபர் அன்பில் மகேஷ் அவர்களை நேரில் சந்தித்து பேசும்படியான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன. அதுமட்டுமில்லாமல் சுகாதார துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் உட்பட திமுக வின் பல முக்கிய புள்ளிகளுடன் அவர் இருக்கும் புகைப்படங்களும் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
இந்நிலையில் அமைச்சர் அன்பில் மகேஷ் அசோக் நகர் பள்ளிக்கு நேரடியாக சென்றுள்ள நிலையில் ஆன்மீக சொற்பொழிவு நடத்திய மகாவிஷ்ணுவை எதிர்த்து கேள்வி கேட்ட சங்கர் என்ற ஆசிரியரை பாராட்டினார். அதன் பிறகு தினசரி என்னை நூற்றுக்கணக்கான விசிட்டர்கள் சந்திக்கிறார்கள். என்னுடன் புகைப்படம் எடுத்துக் கொள்கிறார்கள். அதற்காக நான் அவர்களுடன் நெருக்கமாக இருக்கிறேன் என்பது அர்த்தம் கிடையாது. இந்த சம்பவம் தொடர்பாக 4 நாட்களுக்குள் உரிய விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். இதற்கு தலைமை ஆசிரியர் காரணமா? அல்லது உயர் அதிகாரி காரணமா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்படும்.
என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடத்தில் ஆசிரியர் ஒருவர் அவமானப்படுத்தப்பட்டதை வேடிக்கை பார்த்துக்கொண்டு சும்மா இருக்க மாட்டேன். மாணவர்கள் மத்தியில் தன்னம்பிக்கையை வளர்க்கும் இடத்தில் மாணவர்கள் மத்தியில் பேச வைப்பது தவறு கிடையாது. ஆனால் ஆசிரியர்கள் இதைச் செய்யும் முன்பாக அவருடைய பின்னணியை முழுமையாக விசாரிக்க வேண்டும். மேலும் என்னுடைய கட்டுப்பாட்டில் இருக்கும் ஒரு இடத்தில் தவறு நடந்துள்ளது. அந்த நபரை சும்மா விடமாட்டோம். அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
