
மத்திய பிரதேசம் மாநிலத்தில் உள்ள புர்கான்பூர் பகுதியில் ராகுல் என்ற 25 வயது வாலிபர் வசித்து வந்துள்ளார். இவருக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பாக ஒரு 17 வயது சிறுமியுடன் திருமணம் நடைபெற்றது. ஆனால் அந்த சிறுமி திருமணத்திற்கு முன்பாகவே யுவராஜ் என்ற வாலிபரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் திருமணத்திற்கு பிறகும் அந்தப் பெண் யுவராஜை மறக்காத நிலையில் தொடர்ந்து அவருடன் காதலை வளர்த்தார். இந்நிலையில் தங்கள் காதலுக்கு இடையூறாக இருக்கும் தன் கணவனை யுவராஜுடன் சேர்ந்து அந்த பெண் கொலை செய்ய திட்டம் தீட்டினார்.
அதன்படி கடந்த ஞாயிற்றுக்கிழமை ராகுலுடன் அவர் பைக்கில் செல்லும்போது திடீரென செருப்பு கழன்று விட்டதாக கூறி பைக்கை நிறுத்துமாறு சொன்னார். அவர் பைக்கை நிறுத்திய போது யுவராஜ் நண்பர்கள் இருவர் உடனடியாக வந்து பீர் பாட்டிலால் ராகுலை அடித்தனர். பின்னர் அந்த உடைந்த கண்ணாடி துண்டுகளை வைத்து கிட்டத்தட்ட 36 முறை அவரை குத்தி கொலை செய்தனர். அவர்கள் ராகுலை கொலை செய்த பிறகு யுவராஜுக்கு வீடியோ கால் செய்த அந்த பெண் ராகுலின் சடலத்தை காட்டினார். பின்னர் மூவரும் ஒரு வயல்வெளியில் அவரின் சடலத்தை வீசிவிட்டு தப்பி ஓடிவிட்டனர்.
இதற்கிடையில் ராகுல் மற்றும் அவரது மனைவியை காணவில்லை என குடும்பத்தினர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அந்த புகாரின் படி காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் ராகுலின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து தலைமறைவாக இருந்த யுவராஜ், ராகுல் மனைவி மற்றும் கொலை செய்த இருவர் உட்பட 4 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். மேலும் இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.