திண்டுக்கல்லில் தேமுதிக கட்சியின் பொதுக்கூட்டம் நேற்று நடைபெற்ற நிலையில் அதில் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசினார். அவர் பேசியதாவது, தலைவர் விஜயகாந்தின் கோட்டை தேமுதிக என்று சொன்னால் அது மிகையாகாது. நான் தலைவருடன் திண்டுக்கல்லுக்கு வரும் போதெல்லாம் அவரை மக்கள் வெள்ளம் வரவேற்கும். திண்டுக்கல் மக்கள் அவ்வளவு பாசம் கொண்டவர்கள். எனக்கும் மறைந்த தலைவர் விஜயகாந்துக்கும் திண்டுக்கல் மாவட்டம் மிகவும் பிடிக்கும். திண்டுக்கல் பிரியாணி உலகம் முழுவதும் பிரபலமாக இருக்கும் நிலையில் நம்முடைய தலைவருக்கும் திண்டுக்கல் பிரியாணி தான் மிகவும் பிடித்தமான உணவு. நம்முடைய தலைவர் எங்கும் செல்லவில்லை. உங்களுக்காக உழைத்து உங்களுக்காகவே மறைந்தவர் விஜயகாந்த். கட்சியின் தலைவர்கள் எனக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் என்று கூறினார்கள்.

ஆனால் எனக்கு எந்த விழாவும் கிடையாது. என்று நம் தலைவர் மறைந்தாரோ அன்றோடு எல்லா விழாவும் முடிந்து விட்டது. இனி நான் வாழக்கூடிய வாழ்வு உங்களுக்காக மட்டும் தான் மக்களுக்காக தான். நம்முடைய தலைவருக்கு தமிழ் மொழி மீது  நீங்காத பற்று இருந்ததால் மட்டும்தான் தமிழ் மொழியில் மட்டும் நடித்துவிட்டு மற்ற மொழி படங்களில் நடிக்கவில்லை. எனக்கும் விஜயகாந்துக்கும் திருமணம் நடந்து 32 ஆண்டுகள் வாழ்ந்த காலத்தில் அவருக்கு மனைவியாக வாழ்ந்ததை விட தாயாகவே வாழ்ந்தேன் என்று கூறினார். அவரை என்னுடைய செல்ல குட்டி என்று தான் அழைப்பேன். இப்படி கூறும்போது அவருடைய குரல் தழுதழுத்து கண்களில் கண்ணீர் வந்தது. மேலும் நம்முடைய தலைவரை தவற விட்டு விட்டோம் என்று வருத்தப்படாதீர்கள் மீண்டும் ஒரு வாய்ப்பு கிடைக்கும் என்றார்.