தென்காசி மாவட்டத்தில் உள்ள திருவேங்கடம் இந்திரா நகரில் ஜீவானந்தம்(25) என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் அப்பகுதியில் இருக்கும் ஆலையில் வேலை பார்த்து வந்துள்ளார். இந்நிலையில் ஜீவானந்தத்திற்கும் திருவேங்கடம் பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் திருமணம் பேசி நிச்சயக்கப்பட்டது. வருகிற ஆவணி மாதம் இருவருக்கும் திருமணம் நடைபெற இருந்தது. இந்நிலையில் வேலைக்கு செல்லாமல் அடிக்கடி மது குடித்து வந்த ஜீவானந்தத்தை அவரது பெற்றோர் கண்டித்தனர்.

இதனால் மன உளைச்சலில் இருந்த ஜீவானந்தம் நேற்று மதியம் நள்ளிரவு நேரத்தில் தனது நண்பரை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என கூறினார். இதனால் அதிர்ச்சியடைந்த நண்பர் உடனடியாக ஜீவானந்தத்தின் வீட்டிற்கு தகவல் தெரிவித்தார். அதற்குள் ஜீவானந்தம் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். உடனடியாக அவரை மீட்டு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு ஜீவானந்தத்தை பரிசோதனை செய்த டாக்டர் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.