
ஈரோடு கருங்கல்பாளையம் பச்சையம்மன் கோவில் வீதி ராயல் லே-அவுட் பகுதியை சேர்ந்த ஜாகிர் உசேன் என்பவருக்கு ஹசீனா என்ற மனைவியும், ஆயிஷா பாத்திமா (16), ஜனா பாத்திமா (13) என்ற இரண்டு மகள்களும் உள்ளனர். இவர்கள் இருவரும் அங்குள்ள மாநகராட்சி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் படித்து வந்தனர். ஜாகிர் உசேன் காலையில் தள்ளு வண்டியில் காய்கறி வியாபாரமும் மற்ற நேரங்களில் பேக்கரி மற்றும் ஹோட்டல்களில் சமையல் வேலை என பல பணிகளில் ஈடுபட்டு வந்துள்ளார்.
இவர் தொழில் தொடங்க தனக்கு தெரிந்த ஒரு நபரிடம் கடன் வாங்கிய நிலையில் மகளிர் சுய உதவி குழுக்களில் அவருடைய மனைவியும் கடன் வாங்கி உள்ளார். இந்த கடனை திருப்பி செலுத்த முடியாமல் கணவன் மனைவியிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் ஜாகிர் உசேன் வேலைக்கு சென்று விட்ட நிலையில் தாய் தந்தை சண்டை போட்டதால் ஆயிஷா பாத்திமாவும் ஜனா பாத்திமாவும் பள்ளிக்கூடம் செல்லாமல் வீட்டில் இருந்து உள்ளனர்.
கடன் பிரச்சனை காரணமாக ஹசீனா கடந்த சில நாட்களாக மனவேதனையில் இருந்த நிலையில் தற்கொலை செய்து கொள்ளலாம் என முடிவு செய்துள்ளார். தான் இறந்து விட்டால் தன்னுடைய குழந்தைகளை யார் பார்த்துக் கொள்வார்கள் என்று நினைத்து தன்னுடைய இரண்டு மகள்களுக்கும் விஷம் கொடுத்து கொன்று விட்டு அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாலை நேரம் வீட்டிற்கு வந்த ஜாகிர் உசேன் வீட்டில் மனைவி மற்றும் மகள்கள் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனே இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் மூன்று பேரின் உடல்களையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் நிலையில் கடன் பிரச்சனையால் இரண்டு மகள்களுக்கு விஷம் கொடுத்துவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி உள்ளது.